Work of our Students

The ACS (Independent) Tamil Language Department takes pride in nurturing our students and developing their creativity. Displayed below is a collection of the work of our students over the past few years.

 

மத நல்லிணக்கம்

            அன்பும் மரியாதையும் நிறைந்த நிதி அமைச்சர்திரு. தர்மன் ஷண்முகரத்தினம் அவர்களுக்கும்பண்புசால் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும்இப்பேரவையின்கண் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் எனது பணிவுமிக்க வணக்கங்கள் உரித்தாகட்டும். இங்கு நான் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு “சமய நல்லிணக்கம்” என்பதாகும். எனது பேச்சில் குற்றம் குறைகள் இருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்.

சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் பேசும்போது ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது தன்னுடைய மத நம்பிக்கைக்குப் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உண்மையில்அதை அலசி ஆராய்ந்தால்மத நல்லிணக்கம் எல்லா மதங்களையும் வளர்த்து உலகத்தை மேம்படுத்துமேயொழிய எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.

முதலில்மத நல்லிணக்கம் என்பது என்ன என்று ஆராய்வோம். எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும்,சிறந்தவனாகவும் உருவாக்கும் திறன் சமயத்திடமே உள்ளது. இதனால்அவன் தூய உணர்வால் உந்தப்பட்டுநல்ல கொள்கைகளைப் பின்பற்றி தெய்வ நிலைக்கு உயர்ந்துவிடுகிறான்.

இதனால்மனிதகுலம் உயர்ந்திடச் சமயம் பெரும் பங்காற்றுகிறது. மத நல்லிணக்கம் மனித குலத்தில் நட்புஅன்புஅமைதி போன்றவற்றை உருவாக்குகிறது. இதிலிருந்து மத நல்லிணக்கம் மனிதனைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று என்று தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.

இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்எந்த ஒரு நாடும் தனித்திறமையால் இயங்கிவிட முடியாது. இதற்குக் காரணம் நாட்டிற்கிடையே உள்ள பொருளாதாரசமூககலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருவதே ஆகும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மத நல்லிணக்கம் மிக இன்றியமையாதது.

உலகில் உள்ள பல மதங்களின் நல்ல கருத்துகளை வெளிச்சம் போட்டுக்காட்டிஅவற்றை அனைவரும் பின்பற்ற ஊக்குவிப்பவன் உலகத்திற்குப் பெரும் நன்மை செய்து விடுகிறான். எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்கப்பூர்வமாகக் காண வேண்டும். இது மத நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொரு மனிதனுடைய கடமை என்று நான் ஆணித்தரமாக நம்புகின்றேன். எல்லா மதங்களிலும் ஆக்கப்பூர்வமான,மனித குலத்திற்கு நன்மை அளிக்கும் கருத்துகள் உண்டு.

உதாரணத்திற்கு புத்த மதத்தை எடுத்துக்கொள்வோம்இச்சமயம் கொல்லாமைதிருடாமைபொய்யாமைகள்ளுண்ணாமைகாமம் கொள்ளாமை ஆகிய உயர்ந்த கொள்கைகளை வலியுறுத்துகிறது. இயேசு பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்துவ சமயத்திற்குரிய “பைபிள்” என்ற வேதம் பிற மனிதர்களிடம் அன்பு கொள்ள வேண்டும் என்றும் பகைவனையும் நேசிக்க வேண்டும் என்றும் தீமை செய்தவர்க்கும் நன்மை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய மதமும் உலக சகோதர நேயத்தையும்சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

பல சமயங்கள் வேறுபட்ட சாத்திரங்களையும்சடங்குகளையும் கொண்டிருந்தாலும்அடிப்படை கொள்கையில் ஒன்றுபடுகின்றன. பல்வேறு இடங்களில் தோன்றிப் பாய்ந்தோடும் ஆறுகள் முடிவில் கடலில்தான் கலக்கின்றன. அதே போலசமயங்கள் வேறு வேறு காலக்கட்டத்தில் தோன்றியிருந்தாலும்அவற்றின் இலக்கு இறைவனை அடைவதுதான். தன் மதத்தை மட்டுமே ஆதரிப்பவன் உலகில் மோதலை உருவாக்குகிறான்,வன்முறையைத் தூண்டுகிறான்.

மத நல்லிணக்கத்தை கட்டாயப்படுத்தி உருவாக்க இயலாது. அன்பினால்தான் அதைச் சீராக வளர்க்க முடியும். இப்போது எவ்வாறு மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கலாம் என்று பார்ப்போம். முதலில்பிற மதங்களின் மீது ஒருவருக்குள்ள மன வெறுப்பை நீக்குவதே முதல் படி. பிற மதங்களைப்பற்றி எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் இகழ்ந்து பேசிஇரக்கமற்ற வெறிச்செயலில் இறங்கக்கூடாது. வெறுப்பை ஏற்படுத்தும் கருத்துகளைபகைமை உணர்வைத் தூண்டும் கருத்துகளைப் பறப்பக்கூடாது. அடுத்துபிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். இது சமரசத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு அடுத்தஇறுதியான ஒன்று மனப்பூர்வமாக மரியாதை செய்வது.

மதஇனமொழி வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காகநல்ல கொள்கைகளுக்காக பிற மதத்தை மனப்பூர்வமாக மதிக்க வேண்டும். ஒருவரோடு ஒருவர் அன்பைச் செலுத்திசமய நல்லிணக்கத்தைப் பேணி இவ்வுலகில் உயர்ந்த உன்னத வாழ்வை வாழ உறுதி கொள்வோம்.

நன்றி! வணக்கம்.

Fareed Muhammed

6.12 Caleb (2015)

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாது அவற்றை எதிர்கொண்டால்தான் அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்பதை எனக்கு உணர்த்திய ஒரு சம்பவம்.

ராமு! இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கிறது. நீ சரி என்று கூறவில்லையே! போதும்நம் வகுப்பு இதில் பங்கெடுக்கலாம்’ என்று என் வகுப்பில் உள்ள குமார் என்னிடம் கெஞ்சினான். ஆனால்நான் சிறிதுகூட ஒத்துக்கொள்ளாமல் நின்றேன். ராமு! வாழ்க்கை ஒரு வட்டம். அதில் வெல்பவன் தோற்பான்தோற்பவன் வெல்வான். இதில் நாம் தோல்வி அடைவதைப் பற்றி ஏன் நீ வருத்தப்படுகிறாய். நாம் இதில் பங்கெடுத்தாலே போதும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு’ எதையும் ஒரு நல்ல எண்ணத்துடன் பார்த்தால்அதில் வெற்றி அடைவது சுலபம்’ என்று குமார் பல வழிகளில் என்னை ஒத்துக்கச் சொல்லி வற்புறுத்தினான். இதற்கெல்லாம் என்ன காரணம்ஏன் இந்த நிலைஎன்று நான் என் நினைவுகளில் பின்நோக்கிப் பயணித்தேன்.

மாணவர்களே! நம் பள்ளி முதன்முறையாக ஒரு போட்டி நடத்தப்போகிறது. இதில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவர்கள் தடகளப் போட்டிகளில் பங்கு பெறுவர். ஆனால்ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு ரிசர்வ் இருக்க வேண்டும் என்றார் என் ஆசிரியர் திரு மூர்த்தி அய்யா. எனக்கு ஓடுவது என்றாலே காய்ச்சல் வந்து விடுமே நான் எப்படியாவது ரிசர்வ் இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று என் மனத்தில் நினைத்தவாறு என் கைகளை உயர்த்தினேன். ஆஹா! மாணவர்களே! ராமுவைப் பாருங்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான்’ என்று திரு மூர்த்தி உற்சாகத்துடன் கூறினார். ஆனால் நான் ரிசர்வ் இடத்தைப் பிடிப்பதற்காகக் கையை உயர்த்தினேன் என்பதை அறிந்த திரு மூர்த்தியின் முகத்தில் உற்சாகம் போய்விட்டது. என் வகுப்பில் உள்ள அனைவரும் வெவ்வேறு போட்டிகளுக்குத் தங்களைப் பதிவு செய்துகொண்டனர்.

பள்ளி முடிந்து என் வகுப்பை விட்டு வெளியே செல்லும் போது நான் சத்யாவைச் சந்தித்தேன். அவன் ஒரு விபத்தில் தன்னுடைய கால்களை இழந்ததால் சக்கர நாற்காலியில் இருக்கும் நிலையாகிவிட்டது. என்ன ராமு! எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டேன். நான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் பங்குபெறப் போகிறேன்எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று சத்யா கூறினான். நீ ஓடப்போகிறாயாஅல்லது நாற்கலியில் உட்கார்ந்துகொண்டே செல்லப்போகிறாயாஉனக்கு எதற்கு இந்தத் தேவையில்லாத வேலைஎன்னைப் போல நீயும் ஒரு ரிசர்வ் ஆகிவிடு’ என்று அவனைக் கேலி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

போட்டி நாளும் வந்ததுஎன் வகுப்பில் உள்ள அனைவரும் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தனர். திரு மூர்த்தி பாலுவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவனால் வரமுடியாது என்று கூறிவிட்டார். நம்முடைய தொடர் ஓட்டக் குழுவிற்கு இன்னும் ஒருவர் தேவை’ என்று குமார் கூறியதைக் கேட்டவுடன் என் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் ஓடின. ஒருவேளை என்னை ஓடச்சொல்வார்களோ என்று நான் அஞ்சினேன். திரு மூர்த்தி என்னை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் என் இதயத் துடிப்பை அதிகரித்தது. என் நெஞ்சம் படக்படக்’ என்று தாளம் போட்டது. ராமுபாலு இன்று வரமாட்டான் என்பதால் நீ தான் அவனுக்குப் பதிலாக ஓடவேண்டும்குமார் உன்னிடம் என்ன செய்யவேண்டும் என்று கூறுவான்’ என்று கூறிவிட்டு,என்னைப் பேசவிடாமல் திரு மூர்த்தி சென்றார். குமார்சிறு வயதிலிருந்தே நான் ஓடுவது என்றாலேயே பயப்படுவேன். எனக்குப் பதிலாக வேறு யாரையாவது ஓடச்சொல்’ என்று நான் கெஞ்சினேன். ஆனால் குமாரோ ஒரு மாணவன் ஒரு போட்டியில் மட்டும் தான் கலந்து கொள்ளலாம். நம் வகுப்பில் மீதம் இருப்பது நீ மட்டும்தான்அடம் பிடிக்காமல் வா. இல்லையென்றால் நம் வகுப்பு இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடும்’ என்றான். நான் அவன் கூறியதைக் கேட்காமல் அங்கிருந்து ஓடிவிட்டேன். நான் ஓடினால் என் வகுப்பு கண்டிப்பாகத் தோற்றுவிடும் மேலும் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் நான் இந்தப் பிரச்சினையிலிருந்து  தள்ளி இருப்பதுதான் சரி என்று முடிவெடுத்தேன்.

மாணவர்களே! அடுத்ததாக இருநூறு மீட்டர் ஓட்டம் நடைபெற உள்ளது’ என்று ஒலிபெருக்கியில் நான் கேட்டேன். அதில் சத்யாவும் பங்குபெறுகிறான் என்பதை அறிந்தவுடன் அவன் ஓடுவதைப் பார்க்கச் சென்றேன். துப்பாக்கியின் சத்தத்தைக் கேட்டவுடன் அனைத்து மாணவர்களும் மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கினர். சத்யாவோ மிகவும் கஷ்டப்பட்டு தன் இரு கைகளால் நாற்கலியைத் தள்ளித் தள்ளிச் சென்றான். சுற்றி நின்ற அனைவரும் தங்களுடைய கைகளைத் தட்டி அவனை உற்சாகப்படுத்தினர். நான் என்னை அறியாமலேயே கை தட்டத் தொடங்கினேன். உடல் ஊனமுற்ற சத்யா அவ்வாறு செய்வதைப் பார்த்த நான்  சிறிது நேரத்திற்கு நகரவே முடியாமல் நின்றேன். சத்யா இருநூறு மீட்டர் பந்தயத்தை முடித்த உடனேயே நான் அவனிடம் உடனே சென்றேன். சத்யாஅன்று உன்னைக் கேலி செய்ததற்கு என்னை மன்னித்துவிடு உன்னைப் போன்ற தைரியசாலியை நான் முன்பு பார்த்ததே இல்லை’ என்று கண்ணீர் மல்க அவனிடம் கூறினேன். ராமு நான் என் உடல் ஊனத்தைப் பெரிதாகக் கருதுவதே இல்லை. இதை நான் பெரிதுபடுத்தியிருந்தால் என்னால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

என்பது போல நான் என் வாழ்க்கையில் நடந்த அந்த விபத்தை நினைத்துக் கொண்டே எனக்கு ஏற்படும் பிரச்சினைகளைச் சந்திக்காமல் பயப்பட்டு இருந்தால் நான் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்திருக்காது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ எந்தப் பிரச்சினையையும் பயம் இல்லாமல் சந்தித்துப் பார்கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய்!’ என்று சத்யா கூறிய ஒவ்வொரு சொல்லும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சத்யாநீ என் கண்களைத் திறந்து விட்டாய். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை’ என்று கூறியவாறு நான் குமாரை நோக்கிச் சென்றேன்.

குமார்இப்போது சொல்நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று குமாரை வினவினேன். ராமுநீ கண்டிப்பாக வருவாய் என்று எனக்குத் தெரியும். நாம் இதில் வெற்றி பெறுவது முக்கியமல்லபங்கு பெறுவதே முக்கியம்’ என்று கூறியவாறு தொடர் ஓட்டத்தைப் பற்றி என்னிடம் விளக்கினான். நான் என் வகுப்புக்கு மூன்றாவது ஓட்டக்காரராக இருந்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டது. என் நெஞ்சம் பயத்தில் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நான் என் மனத்தை ஒருமனப்படுத்தினேன். என்னுடைய கைக்குத் தொடர் ஓட்டக் கம்பு வந்தது அதை என்னுடைய உயிருக்குச் சமமாக நினைத்துக்கொண்டு ஓடினேன். உலகமே என் பின்னால் சுக்குநூறாக உடைந்து போவது போல் நினைத்துக்கொண்டு ஓடினேன். நான்காவது ஓட்டக்காரரான குமாரை நெருங்கினேன். என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் ராமுராமு’ என்று கத்துவதைக் கேட்டேன்மகிழ்ந்தேன். என்னைத் தொடர்ந்து ஓடிய குமார் முதலாவதாக வருவதைப் பார்த்தேன். உடனே என் வகுப்பு ஆசிரியரும் மாணவர்களும் எங்களைத் தூக்கிக்கொண்டு பாராட்டினர். நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

சரிதான் போடா தலைவலி என்பது வெறுங்கூச்சல்

என்னும் திரைப்படப் பாடல் என் மனத்தில் ஒலித்தது. நான் தோல்வியை நினைத்து என் வகுப்பிற்கு ஏற்படப்போகும் பிரச்சனையை எண்ணி அஞ்சினேன். ஆனால்எதிர்கொண்ட போதுதான்அதற்கு ஒரு நல்ல தீர்வும் முடிவும் என்னால் கொண்டுவர முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

Perumal Akilesh

4.2 Jacob (2015)

 

அபராதம் விதித்தல் பயன் தரும் தண்டனை – கருத்துரைக்க

            ‘கடுகு களவும் களவுதான்கற்புரம் களவும் களவுதான்’ என்பது பழமொழி. பெரிய குற்றமாக இருந்தாலும் சிறிய குற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே. சிறு குற்றம்தான் எனச் சொல்லி குற்றச்செயலை நியாயப்படுத்த முடியாது. இதுவே அப்பழமொழியின் கருத்தாகும். ஆனால் தவறான இடங்களில் குப்பையைப் போடுபவனுக்கும் கொலை செய்பவனுக்கும் ஒரே தண்டனை கொடுக்க இயலுமாமுடியாது அல்லவாகுப்பை போடுவனுக்குத் தூக்குத் தண்டனை மிகக் கடுமையான தண்டனையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் சிறுகுற்றங்கள் செய்பவனுக்குச் சற்று மென்மையான தண்டனைதான் அபராதம். இக்காரணத்தால் அபராதம் விதிப்பது பயன் தரும் தண்டனை என்பது சிலரின் கருத்து. அதே அபராதம் குற்றவாளிகள்மீது சிறைத் தண்டனைபோல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அது பயன் தருவதில்லை என்பது வேறு சிலரின் கருத்து.

வன்முறையற்ற குற்றங்களுக்கு அபராதம் விதிப்பது உகந்த தண்டனை. அபராதம் விதிப்பதனால் குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்படுவான். ஒருவனுக்குச் சிறை தண்டனை வழங்கப்பட்டால் அது அவனை மட்டும் பாதிக்காது. அது அவன் குடும்பத்துக்கே ஒரு பெரிய நட்டம். குடும்பத்திற்காகச் சம்பாதிக்க ஒரு கை குறைந்துவிடும். ஆனால்அபராதம் விதிப்பதால் இச்சூழ்நிலையைத் தவிர்க்கலாம். குற்றவாளி விரைவாக அபராதத்தைச் செலுத்திப் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கட்டலாம்.

மேலும்அபராதங்கள் விதிப்பதால் சிறு குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம். காசேதான் கடவுளப்பாஅந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா’ என்பது திரைப்படப் பாடல். இப்பாடல் மூலம் மனிதனால் பணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிக அதிகமானது என்பதை அறியலாம். இவ்வளவு முக்கியமான பணத்தை ஒரு சிறு குற்றத்திற்குச் செலவிட மனிதன் தயங்குவான். எனவே ஒரு தடவை ஒருவனுக்கு அபராதம் விதித்தால்அவன் மறுபடியும் அக்குற்றத்தைச் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

அபராதப் பணம்யார்மேல் குற்றம் இழைக்கப்பட்டதோ அவருக்கு நட்ட ஈடாகக் கொடுக்கப்படலாம். இதுவே அபராதம் விதிப்பதனால் கிடைக்கும் மூன்றாவது பயனாகும். பல நேரங்களில் குற்றம் இழைத்தவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் அவர் யார்மேல் குற்றத்தை இழைத்தார் என்பதை மறந்துவிடுகிறோம். அபராதப் பணத்தை அவரிடம் நட்ட ஈடாகக் கொடுத்தால் அவருக்கும் ஒரு வகையான நியாயம் கிடைக்கும் அல்லவா?

ஒரு வேளைகுற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் நிரபராதியாக இருந்தால் அபராதப் பணத்தை அவனிடம் திருப்பிக் கொடுக்கலாம். அமெரிக்காவில் ஒருவர் குற்றம் செய்யாமல் இருந்தாலும்சாட்டப்பட்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட சிறை தண்டனையை 20 வருடங்களுக்கு மேல் அனுபவித்தார். அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டபோது அவருக்கு நட்ட ஈடாக நிறைய பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் போன 20 வருடங்கள் திரும்பக் கிடைக்குமாஅபராதங்கள் இப்பிரச்சினையைத் தவிர்த்துவிடுகின்றன.

ஆனால்அபராதம் விதிப்பது சில வகைகளில் எந்தப் பயனையும் அளிக்காது. பணமில்லாதவர்களுக்கும் நிறைய பணமுள்ளவர்களுக்கும் இது உகந்த தண்டனை கிடையாது. பணமில்லாதவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அவனால் அப்பணத்தைச்  செலுத்த இயலாது. அதனால் ஒரு பயனும் இல்லை. அதே சமயத்தில் நிறைய பணமுள்ள குற்றவாளிகளிடையே அபராதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சிரித்துக்கொண்டே அபராதம் செலுத்திவிட்டு மறுபடியும் குற்றம் புரிவர். குற்றத்திற்குத் தண்டனையான அபராதம் குற்றம் செய்ய அனுமதிக் கட்டணமாகிவிடும். அப்படியானால்,லஞ்சத்திற்கும் அதற்கும்ஒரு வித்தியாசமும் கிடையாது.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல அபராதம் விதிப்பதால் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. அவற்றை அளவிட்டுப் பார்க்கும்போது பயன்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்று தோன்றினாலும்ஒவ்வொரு வழக்கிலும் வெவ்வேறு சூழ்நிலைகளைக் கருதிதக்க தண்டனை வழங்குவது சட்டத்தின் கடமையாகும்.

Ashraf Roshan

4.18 Jude (2015)

 

சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த ஒரு சம்பவம்.

            சாதனை புரிவதற்கே கடவுள் மனிதனைப் படைத்தார். அவ்வகையில் மனிதன் புதுப் புதுச் சாதனைகளை இப்புவியில் படைத்துத் தன்னுடைய அறிவையும் புகழையும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டேயிருக்கின்றான். அதனால்தான் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை என்று அறிந்தோர் கூறுகின்றனர். இதுதான் உண்மை. ஆனால்இந்த உண்மையை உணராதவர்கள் பலர் உள்ளனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஓர் ஆள் குறைந்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை நான்தான்! எதையும் சாதிப்பது என்பது எளிதான செயலன்று என்று எண்ணியிருந்த என் எண்ணத்தையும் வாழ்க்கையையும்என் குடும்பத்தினரின் ஆதரவும்என் நண்பர்களின் ஊக்கமும் திருப்பிப் போட்டுவிட்டது. அந்தச் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உங்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஆசைப்படுகிறேன்.

என் பெயர் முரளி. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுது நான் உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவன். நல்ல பள்ளிநல்ல ஆசிரியர்கள்நல்ல நண்பர்கள் என எனக்கு எல்லாம் நல்லவையாகவே அமைந்தன. இவற்றோடு என் பெற்றோர்களின் அளவில்லாத அன்பினாலும் நான் படிப்பில் சிறந்து விளங்கினேன். இவ்வளவு நல்லனவற்றை அளித்த ஆண்டவன் எனக்கு மிகப் பெரிய குறையைத் தந்துவிட்டான். அதுதான் தன்னம்பிக்கையின்மை. நான் தன்னம்பிக்கை இல்லாது பொந்துக்குள் இருக்கும் சுண்டெலியைப் போல் இருந்தேன்.

நான் எதைச் செய்தாலும்என்னால் முடியுமாநான் இதைச் செய்யக்கூடியவனாசெய்வதில் ஏதேனும் தவறு செய்துவிடுவேனாஎன்னால் இதைச் சாதிக்க முடியுமாஎன்பன போன்ற பல கேள்விக்குறிகள் என் தலைமேல் நாட்டியம் ஆடும். எந்த வேளையிலும்எந்த வேலையிலும்  என் சிந்தனை இப்படி இருக்கஎன்னால் படிப்பில் எப்படிச் சிறந்து விளங்க முடிந்தது என்று கேட்பீர்கள்! அது ஏதோ என் அதிர்ஷ்டம்தான்.

காலங்கள் பறவைகள் போல் பறந்தோடஎன் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அது இஷ்டம் போல் வர ஆரம்பித்தது. எதிலும் ஒரு நல்ல முடிவு ஏற்படவில்லை. நடுக்கடலில் தள்ளிவிடப்பட்டவன் போல் நான் திணறினேன். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பயம் என்னைக் கெட்டியாகக் கௌவ்விக்கொண்டது.

யானையின் பலம் அதன் தும்பிக்கையிலே

மனிதனின் பலம் அவன் நம்பிக்கையிலே

என்பார்கள். ஆனால்என்மேல் எனக்கிருந்த கொஞ்சம் நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டேன். படிப்பில் மட்டும்தான் கோட்டைவிடுகிறேன் என்று முதலில் நினைத்தேன். ஆனால்விளையாட்டிலும் என்னால் சிறந்து விளங்க முடியவில்லை. என் மனம் சுக்கு நூறாக உடைந்தது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அழுது புலம்பினேன்.

ஒரு நாள் வாடிப்போன முகத்துடன் வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று யாரோ பியானோ வாசிக்கும் இசை என் காதில் விழுந்தது. ஆஹா! என்ன இனிமையான இசை! கேட்பதற்குச் சுகமாக உள்ளதே! என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் பார்த்தது என்னை ஒரு கணம் சிலை போல் ஆக்கியது. என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அங்கே இரண்டு கைகளையும் இழந்த ஓர் இளையர் தன் கால் விரல்களால் பியானோவை மிக அழகாக வாசித்துக்கொண்டிருந்தார். என் கண்களிலிருந்து முத்துக்கள் போல் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. என்னால் முடிந்த தொகையை அவருக்கு அளித்தேன்.

அக்கணம்பல வேதனைகளையும் பிரச்சினைகளையும் அனுபவிக்கும் இவரே வாழவேண்டும் என்ற நம்பிக்கையோடு உழைத்துச் சாதித்துக் காட்டும்போதுஎந்தக் குறையும் இல்லாதஅவரைவிடப் பல வகைகளில் வசதிகளை அனுபவிக்கும் என்னால் ஏன் எதையும் சாதிக்க முடியாது என்ற ஓர் எண்ணம் என் மனத்தில் தோன்றியது. அப்போது என் முகத்தில் புன்னகை மின்னியது. மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மந்திரமாக எடுத்துக்கொண்டு என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று என் மேல் நம்பிக்கை வைத்தேன். எனக்குள் புதுமாதிரியான புத்துணர்ச்சி பரவியது. விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி” என்பதை நான் உணர்ந்தேன். அன்றிலிருந்து எதையும் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுமேற்கொண்ட செயல்கள் அனைத்திலும் வாகைசூடி வருகிறேன்.

M Naveen Krishnan

4.15 Noah (2015)

 

கண்ணால் காண்பதும் பொய்காதால் கேட்பதும் பொய்தீர விசாரிப்பதே மெய்.
உணவு நிலையத்திற்குள் அவசரமாக நுழைந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள இருக்கை ஒன்றை முறையின்றித் தமதாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தை விவரித்து எழுதவும் )

            அது ஒரு அந்திசாயும் நேரம்வானம் தகதக எனச் ஜொலித்தது. அழகாகக் காட்சியளித்த வானத்தில் மேகக்கூட்டங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. எங்கும் மல்லிகைப் பூவின் வாசம் கமகம என்று வீசிகொண்டிருந்தது. குளுகுளு என்று தென்றல் வீசசிறு பறவைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தன. அந்த அழகிய காட்சியைக் கண்டு மகிழ இயலாத நிலையில் நான் இருந்தேன். என் நிலையை நொந்துகொண்டே நான் என் வீட்டில் என் அறைக்குள் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தேன். தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த என்னை விட்டுவிட்டு என் குடும்பத்தினர் வீட்டுக்கான பொருட்கள் வாங்க வெளியே சென்றுவிட்டனர். மதியம் ஒழுங்காகச் சாப்பிட முடியாமல் போனதால் பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே எழுந்து வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தேன்அதில் ஒன்றுமில்லை.

வேறு வழியின்றி வயிற்றை நிரப்ப வீட்டிற்கு அருகில் உள்ள உணவு நிலையத்திற்குச் சென்று சாப்பாடு வாங்கலாம் என முடிவெடுத்தேன். மின்னல் வேகத்தில் புறப்பட்ட நான் அடுத்த கணம் அந்த உணவகத்தில் இருந்தேன். நான் உணவகத்திற்குள் நுழைந்த அதே நேரம் என் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஓர் ஆடவர் அவசர அவசரமாக உணவு நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த மாலைப் பொழுதில் அப்படி என்ன பசி இவருக்குஎன யோசித்துக் கொண்டே எனக்குக் கோழி சாதம் வாங்க ஒரு நீண்ட வரிசையில் நின்றேன். பொறுத்தார் பூமி ஆள்வார்’ என மனதைத் தேற்றிக்கொண்டு வரிசையில் நிற்கலானேன்.

மெதுவாக நகர்ந்த அந்த வரிசையில் நின்ற நான் சலிப்புடன் என்னைச் சுற்றிக் கண்களைச் சுழலவிட்டேன். முன்னர் பார்த்த அதே ஆடவர் மீண்டும் என் கண் முன்னர் தோன்றினார். கூட்டமாக இருந்த அந்த உணவு நிலையத்தில் அமர்ந்து சாப்பிட ஓர் இருக்கையைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். கண்கள் இரண்டும் சிவக்கபற்களை நற நற’ எனக் கடித்துக்கொண்டு இருந்தார். அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. உணவை வேறு தூக்கிக்கொண்டு அலைய நேரிட்டதால் அவர் கோபத்தில் எரிமலை போல் குமுறிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட எனக்கு ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

இருக்கையைத் தேடி திரிந்த அந்த ஆளுக்கு இறுதியில் ஓர் இருக்கை தென்பட்டது. அவரைக் கவனித்துக் கொண்டிருந்த நான் அவரின் பார்வை மாறுவதைக் கவனிக்கத் தவறவில்லை. அதே இருக்கையில் அமர அதன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரைத்தான் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். மூதாட்டிக்கு அந்த இருக்கையை விட்டுக்கொடுத்து நகர்ந்துவிடுவார் அந்த ஆடவர் என எதிர்பார்த்த எனக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது. இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கு அந்த ஆடவர் ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோலதன் உணவை ஒரு கையில் வித்தைக்காரர்போல நிலைப்படுத்திக்கொண்டு அந்த இருக்கைக்கு விரைந்து ஓடினார். அந்த ஒரு கணத்தில் அந்த ஆடவரைப் பற்றி ஆயிரம் குறை கண்டுபிடித்துத் திட்டினேன். பரிவுஇரக்கம் இல்லாத மனிதன்புத்திகெட்டவன்,சுயநலவாதி என அவரைப் பலவாறாக மனத்துள் திட்டித் தீர்த்தேன்.

என் சிந்தனை ஓட்டம் முடிவதற்குள் அந்த ஆடவர் தனது ஓட்டத்தை முடித்துக்கொண்டு அந்த மூதாட்டிக்கு முன்னரே அந்த இருக்கையை அடைந்தார். சற்றும் யோசிக்காமல் இருக்கையில் அமர்ந்தார் அந்த ஆடவர். டம்’ என்று சத்தம் கேட்ட மறுநொடி அய்யோ’ என அந்த ஆடவரின் குரல் ஒலித்தது. என் மனம் ஆதங்கத்திலிருந்து ஆனந்தத்திற்கு மாறியது. இருக்கை உடைந்ததால் அந்த ஆடவர் கீழே விழுந்ததை எண்ணி என் மனம் நிம்மதி அடைந்தது. அடுத்த கணமே வலியுடன் இடுப்பைப் பிடித்தவாறு எழுந்த அந்த ஆடவர்அருகில் இன்னும் அதிர்ச்சியில் உறைந்திருந்த மூதாட்டி அடிபடாமல் இருக்கிறாரா என உறுதி செய்ய முயன்றார்.

ஒரு நிமிடம் என் இதயமே நின்றதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. குற்ற உணர்ச்சியால் வெட்கித் தலை குனிந்தேன். அந்த ஆடவர் உடைந்திருந்த இருக்கையில் அந்த மூதாட்டியை அமரவிடாமல் தடுப்பதற்குத்தான் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு விளங்கியது. இப்படியோர் நல்ல மனிதரைத் தவறாக எண்ணிவிட்டோமே என நான் என்னையே நொந்துகொண்டேன்.

வயிற்றில் இருந்த பசி மனத்தில் குற்ற உணர்ச்சியாக மாற அந்த உணவு நிலையத்திலிருந்து பல சிந்தனைகளுடன் கிளம்பினேன். கண்ணால் காண்பதும் பொய்காதால் கேட்பதும் பொய்தீர விசாரிப்பதே மெய் என அறிந்தேன். ஆயிரம் வழிகளில் கெட்டவனாகலாம். ஆனால் ஆயிரம் நல்லது செய்தாலும் நல்லவனாக முடிவதில்லை என இந்தச் சமுதாயத்தையும் என்னையும் குறைபட்டுக்கொண்டேன். இன்று நடந்தது என்றும் மறக்காத வகையில் கிடைத்த வாழ்க்கைப் பாடமாக அமைந்ததை எண்ணி வியந்துகொண்டே வீட்டை நோக்கிச் சென்றேன்.

Manimaran Manojkumar

4.1 Joshua (2015)

 

உன் குடும்பத்தில் நீ முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒருவரைப் பற்றியும் ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை விளக்கியும் ஒரு கட்டுரை எழுதவும்.

          இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் மிகவும் பிடித்தமானவர் ஒருவர் இருப்பார். பெரும்பாலும்எல்லோரும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அவரைப் போலவே வாழ்க்கையில் வெற்றிப் பாதையில் செல்லவேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பார்கள். அந்தக் குறிக்கோளை அடைய அவர்கள்அவர்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்வார்கள். என் வாழ்க்கையில் இப்படிப்பட்டவர் என் சொந்தக் குடும்பத்தில் இருக்கும் என்னுடைய அண்ணனே ஆவார். நான் அவரையே எனக்கு ஒரு முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி அடுத்தடுத்து வரும் பத்திகளில் மேலும் விளக்கமாகக் காண்போம்.

என்னுடைய அண்ணன் உயர்நிலை நான்கில் பயிலும் மாணவர். அவர் பல நல்ல பழக்கங்களையும் பண்புகளையும் கொண்டிருக்கின்றதால்நான் அவரை ஒரு சிறந்த முன்மாதிரியாக ஏற்றுக்கொள்கிறேன். முதலாவதாக, ‘வைகறை துயில் எழு’ என்ற வரிக்கு ஏற்ப என்னுடைய அண்ணன் அதிகாலையிலேயே மிகவும் விரைவாக எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவார். இது பலரிடம் இல்லாத ஒரு மிகவும் சிறந்த பழக்கம் என்று நான் நம்புகிறேன். என்னுடைய அன்னையும் இதைப் பற்றி என்னிடம் அடிக்கடி வலியுறுத்துகின்றதால்நானும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.

என் அண்ணனிடம் இருக்கும் மற்றொரு நல்ல பழக்கம் என்னவென்றால்அவர் தன்னுடைய பள்ளி வேலைகளையும் வீட்டுப்பாடங்களையும் உடனுக்குடனே மிகவும் விரைவாக முடித்திட முயல்வார். நான் சற்றுக் குறும்புக்கார மாணவன் என்பதால்,  விட்டுப்பாடத்தை முடித்துக் கொடுக்கவேண்டிய நாள் வரை காத்திருந்துஅப்போதுதான் அந்த வேலையைச் செய்யத் தொடங்குவேன். ஆனால்என்னுடைய அண்ணனோ எனக்கு மாறாக இருப்பவர்.

அவர் தினமும் பெருவவிரைவு ரயில் வண்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போதுஅந்த நாளுக்கான வீட்டுப்பாடங்களை எப்போது செய்வது,அன்று எந்தெந்தப் பாடங்களை மறுபடியும் திருப்பிப் பார்ப்பது என்று சிந்தித்துஒரு விளக்கமான கால அட்டவனையைத் தயாரித்துக்கொள்வார். இந்தப் பழக்கத்தினாலேயே அவர் நேரத்தை மிகவும் சிறப்பான முறையில் வகுத்துக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளார். இந்தத் திறன்,எதிர்காலத்தில் வேலை இடத்திலும் மிகவும் முக்கியமான திறன் என்பதால்நானும் இந்தத் திறனை வளர்த்துக்கொள்வதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யத் தொடங்குகிறேன்.

மேற்கண்ட நல்ல பழக்கங்கள் எல்லாவற்றையும் கொண்டிருப்பதோடு என்னுடைய அண்ணன் படிப்பிலும் மிகவும் சிறந்து விளங்குவார். மேலும்அவர் தமிழ்ப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெறுவார். என்னுடைய அண்ணன், ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற பொன்னான வாக்கைத் தன்னுடைய மனத்தில் கொண்டு செயல்படுபவர். ஒவ்வொரு நாளும் அவர் பல மணி நேரம் செலவழித்துப் படிப்பார். நாம் இப்போது மிகவும் கடினமாக உழைத்துப் படித்துவிட்டால்எதிர்காலத்தில் நம் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்,’ என்று என் அண்ணன் என்னிடம் அறிவுரை கூறுவதை நான் பல முறை கேட்டிருக்கின்றேன். அவர் படிப்பில் மிகவும் சிறந்து விளங்குவதால் அவருடைய பள்ளி அவருக்கு ஒவ்வொரு மாதமும் உபகாரச் சம்பளம் அளிக்கிறது.

என்னுடைய அண்ணன் மிகவும் சிறப்பான தலைமைத்துவ திறனையும் கொண்டுள்ளார். சிறு வயதிலிருந்தே அவருடைய வகுப்பின் தலைவராக இருந்து வந்திருக்கும் அவர்தன்னுடைய பள்ளியில் இப்போது துணைத் தலைமைச் சட்டாம்பிள்ளையாக விளங்குகிறார். மேலும்என்னுடைய அண்ணன் முடிந்தவரை எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டும் மனப்பான்மையைக் கொண்டுள்ளார். அவர் தினமும் எனக்கு என்றே சற்று நேரம் ஒதுக்கி எனக்குப் பள்ளி சம்மந்தப்பட்ட வேலைகளில் உதவுவார். அவர் இன்னொரு படி உயர்ந்துமுதியோர் இல்லத்திலும் தொண்டூழிய வேலைகளை மேற்கொள்வார்.

மேற்கண்ட இவ்வளவு சிறப்பான பழக்கங்களையும் பண்புகளையும் எல்லாம் என்னுடைய அண்ணன் கொண்டிருப்பதால் அவர் எனக்கு ஒரு முன்மாதிரி ஆவார். நானும் அவரைப் போல வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கனவு…

Palaniappa Sudharshan

2.11 Asher (2015)